News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Friday, March 20, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 8

வரலாறு தொடர்பான முன்னறிவிப்புகள்

30 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர்ஆன் 15:9
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். மேலும் அந்தக் காலத்தில் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய சாதனங்களாக மரப்பட்டைகளும், தோல்களுமே பயன்பட்டன.
இத்தகைய கால கட்டத்தில் 23 வருடங்களில் சிறிது சிறிதாக அருளப்பட்ட திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகள் கடந்து விட்ட பிறகும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எவ்வித மாறுதலுக்கும் இடம் தராமல் அருளப்பட்ட மூல மொழியிலேயே இவ்வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வேதம் அருளப்பட்ட காலத்திற்கு நம் மனக் குதிரையை ஓடவிட்டால் அந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று நம்ப முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பல வகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் 'இதை நாமே அருளினோம், நாமே பாதுகாப்போம்' என்று உத்தரவாதம் அளிக்கிறது. திருக்குர்ஆனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எத்தனையோ நூல்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன நிலையில் திருக்குர்ஆன் அருளப்பட்ட வடிவத்திலேயே பாதுகாக்கப்பட்டு வருவது இது இறைவனின் வேதம் என்பதற்குச் சான்றாக உள்ளது.

31 கஃபா பற்றி முன்னறிவிப்பு

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதல் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.
அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 2:125
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
திருக்குர்ஆன் 3:97
'இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 14:35
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
திருக்குர்ஆன் 29:67
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:3
கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.
திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.
இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிருந்து கனிகள் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிப்பு செய்கிறது.
'நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 28:57
இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகள் மக்களிடம் ஊறித் திளைத்த மூட நம்பிக்கைகளைத் தாட்சண்யமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்தார்கள்.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் சுரண்டிக் கொழுத்தவர்களையும் ஆள் பலம் பண பலம் காரணமாக பலவீனர்களுக்குக் கொடுமை செய்த வமை மிக்க தலைவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூர்க்கமாக எதிர்த்தார்கள்.
அனைத்து விதமான தீமைகளையும் எதிர்த்து வீரியத்துடன் பிரச்சாரம் செய்ததால் அதிகமான எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார்கள்.
'இவரைக் கொன்றொழித்தால் தான் நமக்கு நல்லது' என்று தீயவர்கள் பல சந்தர்ப்பங்களில் திட்டமிடும் அளவுக்கு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். எதிரிகள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதை அறிந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி மதீனாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
மதீனா சென்ற பிறகு அவர்களின் ஆதரவுத் தளம் விரிவடைந்தாலும் அங்கேயும் அவர்களுக்கு எதிரிகள் இருந்தனர். நல்லவர்களைப் போல் நடித்து திட்டம் தீட்டியவர்கள் மதீனாவில் இருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எதிரிகள் பற்றிய அச்சம் காரணமாக) தூக்கமில்லாதவர்களாக இருந்தனர். மதீனாவுக்கு வந்த போது 'இரவில் என்னைப் பாதுகாக்கும் நல்லவர் ஒருவர் இல்லையா?' என்று கூறினார்கள். அப்போது ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். 'யாரது?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நான் தான் ஸஅது பின் அபீ வக்காஸ்; உங்களுக்குக் காவல் காக்க வந்துள்ளேன்' என்று ஆயுதத்திற்கு உரியவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நுல் : புகாரி 2885,7231)
இரவில் உறக்கம் வராத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் பற்றி அச்சம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
பத்ருப் போர், உஹதுப் போர், அகழ்ப் போர், கைபர் போர், ஹூனைன் போர் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 5.67
சத்திய மார்க்கத்தை அச்சமின்றி எடுத்துச் சொல்லுமாறும், எடுத்துச் சொல்வதால் எதிரிகளால் எந்த ஆபத்தும் நேராமல் காப்பது தன் கடமை என்றும் இறைவன் இவ்வசனத்தில் அறிவிக்கிறான்.
இறைவன் இவ்வாறு அறிவித்ததாக ஒருவர் கூறினால் அதன் விளைவு என்ன? இறைவனே பாதுகாப்பதாகக் கூறுவதால் இனி மேல் அவருக்குப் பாதுகாப்பு தேவையில்லை என்பது பொருள். மேலும் தன்னை எவராலும் கொல்ல முடியாது என்று அறை கூவல் விடுகிறார் என்பதும் பொருள்.
இந்த உத்தரவாதம் இறைவனிடமிருந்து வந்திருக்காவிட்டால் இப்படி அறிவித்த காரணத்துக்காகவே எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்து 'அவர்கள் இறைத்துதர் அல்ல' என்று நிரூபித்திருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் ஒருவர் ஆராய்ந்தால் 'உலகிலேயே மிகவும் எளிதாகக் கொல்லப்படத்தக்கவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்' என்பதை அறிந்து கொள்வார்.
நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் குடிசையில் தான் வசித்தார்கள். அந்தக் குடிசைக்கு தாழிடப்படும் வசதியான கதவுகள் கூட இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் பட்டப்பகலிலோ, நள்ளிரவிலோ வீட்டுக்குள் புகுந்து அவர்களைக் கொல்ல முடியும் என்ற அளவுக்குப் பலவீனமான நிலையில் இருந்தார்கள்.
மேலும் தினசரி ஐந்து நேரமும் பள்ளிவாசலில் வந்து தொழுகை நடத்தி வந்தார்கள். தினமும் குறிப்பிட்ட ஐந்து நேரத்தில் மக்களால் சந்திக்கப்படும் நிலையில் உள்ள ஒருவரைத் தக்க தருணம் பார்த்துக் கொல்வதாக இருந்தால் கொன்று விட முடியும்.
மேலும் வெளிப்படையாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினால் அவரைப் பற்றி எதையும் விசாரிக்காமல் அவரது வாக்கு மூலத்தை நம்பி முஸ்ம்கள் பட்டியலில் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைத்துக் கொள்வார்கள்.
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான். நம்மால் வெளிப்படையானதை மட்டும் தான் அறிய முடியும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருந்தனர். பள்ளிவாசலுக்கு வரும் யாரும் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.
இதனால் தான் முஸ்லிம்களாக இல்லாமல் முஸ்லிம்களாக நடித்த நயவஞ்சகர்கள் பள்ளிவாசல் வந்து தொழுவதாக நடித்து வந்தனர். அவர்களில் ஒருவர் கூட தடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்ல நினைக்கும் ஒருவர் அவர் யாரென்றே அறியப்படாதவராக இருந்தாலும் சாதாரணமாகப் பள்ளிவாசலுக்குள் நுழையலாம். யாரும் கேட்டால் 'நானும் முஸ்லிம் தான்' என்று கூறினால் உள்ளே நுழைய அதுவே போதுமானதாக இருந்தது.
அரண்மனையிலும், கோட்டைகளிலும் வாழாமல் எந்த மனிதரும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்திருந்தும் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவரும் கொல்ல முடியாது' என்று இறைவன் அறிவித்தான்.
கொல்லப்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துக் கொண்டு அனைத்து தீமைகளையும் எதிர்த்ததன் மூலம் எதிரிகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டு இருந்தும் அவர்களை யாராலும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான். இறைவன் அறிவித்த படியே இயற்கையான முறையில் தமது 63வது வயதில் அவர்கள் மரணம் அடைந்தார்கள்.

No comments:

Post a Comment