News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, March 21, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 9

33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்துதர் மூஸா (அலை) அவர்கள் கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்னையும், அவனது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த இறைத்துதராக நியமிக்கப்பட்டார்கள்.
ஆனாலும் அவன் திருந்தவில்லை. ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபி அவர்கள் காட்டிய பிறகும் அவன் நம்பிக்கை கொள்ள மறுத்தான். மூஸா நபியையும், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். முடிவில் தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பித்து மூஸா நபி அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களை விரட்டி வந்தான். எதிரில் கடல்! பின்னால் பிர்அவ்னின் படை! இப்படிச் சிக்கல் மாட்டிக் கொண்ட மூஸா நபி அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியால் கடல் மீது அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு பிளவும் ஒரு மலை அளவுக்கு உயரமாக ஆனது.

இந்தப் பாதையில் புறப்பட்டு மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் மறு கரையை அடைந்தார்கள். அதே பாதையில் விரட்டி வந்த ஃபிர்அவ்னும், அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அறவே அழிக்கப்பட்டனர்.
ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட போது அவனை நோக்கி இறைவன் பின்வருமாறு கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது 'இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்' என்று கூறினான். 'இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)' மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
திருக்குர்ஆன் 10:90-92

கடலில் மூழ்கடிக்கப்பட்டவர்கள் மீன்களுக்கு இறையாவார்கள். அல்லது கரை ஒதுங்கி அழுகிப் போவார்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ஃபிர்அவ்னின் உடல் அவ்வாறு அழியாது. அது என்னால் பாதுகாக்கப்படும் என்று இறைவன் கூறுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலோ, அதைத் தொடர்ந்து பல நுற்றாண்டுகளாகவோ அந்த உடல் எங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற விபரம் எதுவும் உலகுக்குத் தெரியவில்லை.
அன்றைக்கே அந்த உடலை வெளிப்படுத்தி மக்கள் முன் காட்டியிருந்தால் அந்த உடலைத் தொடர்ந்து பாதுகாத்திருக்க முடியாது. பாதுகாக்கும் வழிமுறைகளை அன்றைய மக்கள் அறிருந்திருக்க வில்லை.
எந்தக் காலத்தில் அதை வெளிப்படுத்தினால் மனிதர்கள் அதைப் பாதுகாத்துக் கொள்வார்களோ அந்தக் காலத்தில் 1898ல் அவனது உடல் பணிப்பாறைகளுக்கு இடையே கண்டு பிடிக்கப்பட்டு எகிப்தின் தலை நகரம் கொய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த உடலின் வயதை அறிய கார்பன் சோதனை உள்ளிட்ட அனைத்துச் சோதனைகளும் செய்து 'இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடல்' என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

34 நுஹ் நபியின் கப்பல்

நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இதைத் துதர்களில் ஒருவராக இருந்தார்கள்.
950 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் பிரச்சாரத்தை சொற்பமானவர்களே ஏற்றனர். பெரும் பகுதி மக்கள் அவர்களை நம்ப மறுத்தனர். சொல்லவொண்ணாத துன்பங்களையும் கொடுத்தனர்.
இறுதியாக இறைவனிடம் நுஹ் நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். 'இனிமேல் இவர்கள் திருத்த மாட்டார்கள். இவர்களை அழித்து விடு' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் இறைவன் ஒரு கப்பலைச் செய்யுமாறு கட்டளையிட்டான்.
கப்பல் செய்து முடித்ததும் நம்பிக்கை கொண்டவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறும் ஒவ்வொரு உயிரினங்களில் ஒரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.
இதன் பின்னர் பயங்கரமான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. வானத்திருந்து மழை கொட்டியது. பெரிய மலைகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளத்தின் கடுமை இருந்தது. கப்பல் ஏறிக் கொண்ட நன்மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஏற்காத மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.
வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் இந்தக் கப்பல் ஜுதி எனும் மலை மீது இறங்கியது. இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்' எனவும் கூறப்பட்டது.
திருக்குர்ஆன் 11:44
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.
திருக்குர்ஆன் 29:14.15
'நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
திருக்குர்ஆன் 54:10-17
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது.

35 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது பின்வரும் வசனம் அருளப்பட்டது. இறைவனை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை விளக்குவதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இதில் ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது.
'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 73:20
பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இப்படிக் கூறும் போது 'உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனி மேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்' எனக் கூறுகிறான்.
நோயாளிகள் உருவாவதை யாரும் சொல் விட முடியும். முஸ்ம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும்.
இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் ஒரு ஆட்சி உருவானது. இதனால் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள்.
திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொரு சான்றாக இந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்துதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத் தாங்கினார்கள்.
அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களையும் அவர்களின் எதிரிகள் சொல்லொண்ணாத இன்னல்களுக்கு உட்படுத்தினார்கள்.
சொந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற அளவுக்குக் கொடுமைகள் எல்லை மீறிய போது தமது தோழர்களில் ஒரு பகுதியினரை அபீஸீனியா நாட்டுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தார்கள்.
தாமும், தமது நெருக்கமான தோழர்கள் சிலரும் சொந்த ஊரில் இருந்து கொண்டு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தனர்.
நபிகள் நாயகத்தையே கொன்று விட எதிரிகள் திட்டம் தீட்டிய போது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இரவோடு இரவாக மதீனாவுக்குச் சென்றார்கள்.
இந்த ஊரில் இனி மேல் வாழவே முடியாது என்ற நிலையில் ஊரை விட்டுப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்வரும் உறுதி மொழியை இறைவன் வழங்கினான். (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். 'நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 28:85
இதன் பொருள் என்ன? எந்த ஊரிருந்து விரட்டியடித்தார்களோ அதே ஊருக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைவார்கள் என்பது தான் இதன் பொருள்.
ஒரு மனிதன் தோல்வியடையும் போது 'இறுதி வெற்றி எனக்குத் தான்' என்று கூறுவதைப் பார்க்கிறோம். தோல்வியடையும் நாட்டின் தலைவன் 'மீண்டும் வெல்வேன்' என்று கூறுவது சகஜமான ஒன்று தான்.
ஊரை விட்டு விரட்டப்பட்ட எத்தனையோ பேர் இதே ஊருக்கு மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்று சிலருக்குத் தோன்றலாம்.
தோற்றவர்கள் கூறுவது போல் சில வேளை நடக்கலாம். சில வேளை நடக்காமலும் போகலாம். அவர்கள் கூறியவாறு நடந்தால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அவர்கள் கூறியவாறு நடக்காவிட்டால் 'நான் மனிதன் தானே? ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்படிக் கூறி விட்டேன்' எனக் கூறிச் சமாளிப்பார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் மீண்டும் மக்கா வருவேன்' என்று கூறவில்லை. மாறாக 'உம்மை உமது இறைவன் மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான்' என்று இறைவனே தன்னிடம் கூறினான் என்பது தான் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு. அதாவது என்னை மக்காவுக்குள் மீண்டும் கொண்டு வருவதாக இறைவன் எனக்கு உத்தரவாதம் தந்துள்ளான் என்ற பொருள்படும் வகையில் அவர்களின் முன்னறிவிப்பு அமைந்துள்ளது.
இறைவனே இவ்வாறு கூறியதாக அறிவிப்பதென்றால் அது நிச்சயம் நிறைவேற வேண்டும். அவ்வாறு நிறைவேறாவிட்டால் அது இறைவன் கூறியதல்ல; முஹம்மது கற்பனை செய்து கூறியது என்று ஆகிவிடும். இதனால் முஹம்மது இறைத் துதர் அல்ல என்பதும் வெளிச்சமாகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கமே பொய் என்று ஆகி விடும்.
ஆம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு ஆறு ஆண்டுகளில் எவ்வித எதிர்ப்புமின்றி கத்தியின்றி இரத்தமின்றி மக்காவுக்குள் வெற்றி வீரராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அளித்த உத்தரவாதம் முழுமையாக நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதும் நிருபணமாகிறது.

No comments:

Post a Comment