News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, March 18, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 6

19 கருவில் குழந்தையின் வளர்ச்சி

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு
தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் வேறு படைப்பாக மாற்றினோம்' என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

20 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 76:2
மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
துளி' என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.
மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை நிரூபிக்கிறது.

21 ஜோடி ஜோடியாக...

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.
பூமி முளைக்கச் செய்வதிருந்தும், அவர்களிருந்தும், அவர்கள் அறியாதவற்றிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.
திருக்குர்ஆன் 36:36
அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 13:3
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.
திருக்குர்ஆன் 20:53
அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான். கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 43:12
நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 51:49
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது தற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் 'இவர்கள் அறியாமல் இருப்பவற்றிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக' இறைவன் கூறுகிறான்.
அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கின்றான்.
மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன.
அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன.
இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிருந்து 'இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான்' என்பதை அறிந்து கொள்ளலாம்.

22 விந்தின் பிறப்பிடம்

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிருந்து வெளிப்படுகிறது.
திருக்குர்ஆன் 86:5,6,7
சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும், முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டு பிடித்தனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.

23 கர்ப்ப அறையின் தனித் தன்மை

ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.
திருக்குர்ஆன் 13:8
திருக்குர்ஆனின் வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.
பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும்.
இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. கருவைப் பல மாதங்கள் வளர்த்து திடீரென அதை வெளியேற்று வதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
'ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்று வரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.
இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

24 விரல் ரேகையின் முக்கியத்துவம்

அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
திருக்குர்ஆன் 75:4
மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடல் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்னவென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

25 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

கால் நடைகள் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கூறுவது போல் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியுள்ளது.
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.
திருக்குர்ஆன் 16:66
தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்ன பிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.
அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்த்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment