News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, March 17, 2015

வருமுன் உரைத்த இஸ்லாம் - பகுதி 5

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!
திருக்குர்ஆன் 17:37
மனிதன் ஆகாயத்தில் லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றை எல்லாம் அறியும் திறன் பெற்றிருக்கிறான். சென்று வரும் அளவுக்கு ஆற்றலும் பெற்றிருக்கிறான்.
ஆனால் அவன் வசிக்கின்ற பூமியில் பெரிய அளவுக்கு அவன் இன்னும் ஊடுறுவிச் செல்லவில்லை. மிக அதிகமாக அவன் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டர் தூரம் தான்.
5 கிலோ மீட்டர் ஆழத்திற்குக் கீழே இன்னும் மனிதன் சென்றடையவில்லை. சென்றடைய முடியாது என்றும், சாத்தியமற்றது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல ஏற்கத்தக்க காரணங்களையும் கூறுகிறார்கள்.

http://science.howstuffworks.com/environmental/earth/geophysics/dig-hole-to-earths-mantle.htm


விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்த் தருகின்ற திருக்குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்பதை இவ்வசனத்தின் மூலம் சொல்கின்றது.

உலகின் மிக உயரமான மலை இமய மலையாகும். இம்மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இத்தகைய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட முடியும். ஆனால் அந்த உயரத்திற்குக் கீழே செல்ல முடியுமா? என்றால் ஒருக்காலும் சாத்தியமே ஆகாது. அதிகபட்சம் மனிதன் பூமிக்கு அடியில் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டருக்கும் குறைவானவையே.
'நீ மேலே போகலாம்; இன்ன பிற சாதனைகள் நிகழ்த்தலாம்; உன் காலுக்குக் கீழே ஒரு நீண்ட மலை உயரத்திற்குப் போக முடியுமா? என்றால் போக முடியாது' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் சொன்னதை இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொல்லும் அதிசயத்தைப் பார்க்கிறோம்.

இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்குச் சான்றாகும்.

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
திருக்குர்ஆன் 23:18
பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.
இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதல் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580ல் தான் கண்டறிந்தனர். சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.
பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
திருக்குர்ஆன் 27:61
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
திருக்குர்ஆன் 55:19,20
கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.
இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

13 உதிக்கும் பல திசைகள்

சாதாரணமாக திசைகளைப் பற்றி பேசும் போது கிழக்கு மேற்கு என்று ஒருமையில் தான் குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன் இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் எனவும் பல கிழக்குகள் பல மேற்குகள் எனவும் பயன்படுத்தியுள்ளது.
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.
திருக்குர்ஆன் 37:5
(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
திருக்குர்ஆன் 55:17
கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.
திருக்குர்ஆன் 70:40
'இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள்' என்ற சொற்றொடரும் 'பல கிழக்குகள் பல மேற்குகள்' என்ற சொற்றொடரும் இந்தப் பூமி உருண்டை என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். சூரியன் உதிக்கும் திசையைக் கிழக்கு என்போம். மறையும் திசையை மேற்கு என்போம்.
பூமி உருண்டையாக இருந்தால் நமக்கு எந்தத் திசையில் சூரியன் மறைகிறதோ அதே திசையில் சூரியன் உதிப்பதை பூமியின் மறு பக்கத்தில் உள்ளவர் காண்பார், அதாவது நமக்குக் கிழக்காக இருப்பது மறு பக்கம் உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது. நமக்கு மேற்காக இருப்பது மறு பக்கம் உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது. இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்பது எவ்வளவு பொருள் பதிந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாகும்.

14 மனிதர்களால் குறையும் பூமி

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது.
திருக்குர்ஆன் 50:4
அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.
திருக்குர்ஆன் 71:17
உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.
பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருள்களுமே தங்களின் எடையைப் பூமியிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.
எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியைப் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும். மனிதன் பூமியிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
இதே தத்துவத்தை மற்றொரு கோனத்திலும் திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் கூறுகிறது. அவனே உங்களை ஒரே ஒருவரிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
திருக்குர்ஆன் 6:98
இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்ற 'ஒப்படைக்கப்படும் இடம்' என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.
மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.
மண்ணிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.
50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.
மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி 'ஒப்படைக்கப்படுகின்ற இடம்' என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

15 ஆழ் கடலில் அலை

கடலின் மேற்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன; கடலின் ஆழத்தில் ஏற்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.
ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.
திருக்குர்ஆன் 24:40
இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும். அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.
கடன் மேற்பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடன் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.
கடன் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது.

எனவே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.

16 மலட்டுக் காற்று

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.
திருக்குர்ஆன் 51:41,42

காற்றை அனுப்பி ஒரு சமுதாயத்தை எப்படி அழிக்க முடியும்? இக்கேள்விக்கு இவ்வசனத்திலேயே விடை அமைந்துள்ளது. அதாவது இந்தக் காற்று மலட்டுக் காற்றாக இருந்ததே காரணம் என்று இறைவன் கூறுகிறான்
காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்து விட்டால் காற்று இருந்தும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக் காற்று என்று இவ்வசனம் கூறுகிறது.
நவீன உலகில் சில வகையான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் எதுவும் சேதமாகாது. ஆனால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் இல்லாமல் ஆக்கி விடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் செத்து விடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக் காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

17 மாதங்கள் பன்னிரண்டு

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
திருக்குர்ஆன் 9:36
வருடத்துக்கு 12 மாதங்கள் என்பது இன்று பால பாடமாகவுள்ளது. ஆனால் வருடத்துக்கு பன்னிரண்டு மாதங்கள் என்பதை ஆரம்பம் முதலே மனிதன் கண்டுபிடிக்கவில்லை. பல விதமான கணக்குகளில் பல்வேறு கால கட்டங்களில் மாதங்களின் எண்ணிக்கையை மனிதன் குறிப்பிட்டு வந்தான்.
பூமி, சூரியனைச் சுற்றி வருவதற்கான கால அளவு 12 மாதங்கள் என்பதைப் பிற்காலத்தில் தான் கண்டு பிடித்தனர். ஆனால் இவ்வசனமோ வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள் என அடித்துச் சொல்கிறது.
பூமியையும், சூரியனையும் படைத்தவனால் மட்டும் தான் பதினான்கு நூற்றாண்டுக்கு முன் இந்த உண்மையைக் கூற முடியும். திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

18 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.
திருக்குர்ஆன் 13:2
அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 31:29
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
திருக்குர்ஆன் 35:13
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன் 36:38
தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 39:5
பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.
பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.
உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.
பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.
பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.
இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல் இருக்கவே முடியாது.
இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

No comments:

Post a Comment